Business Partner
கூட்டுத் தொழிலில் குதூகலம்
கூட்டுத் தொழிலில் குதூகலம்
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" இது சாதாரண வார்த்தை அல்ல, பொன் தகட்டால் பொறிக்க வேண்டிய வார்த்தை. ஒரு மனிதன் தனது பால்ய வயதை தாண்டியதும், அடுத்த எண்ணம் தொழில் அல்லது சிறப்பு மிக்க வேலை. வேலை அமையவேண்டுமானால் நாலாம் இடத்துடன் பத்தாம் ராசியும் பலப்படவேண்டும். தொழில் செய்ய வேண்டுமானால், முதலில் பார்க்க வேண்டியது லக்ன பாவத்துடன் ஜீவன பாவம் என்கின்ற பத்தாம் பாவம். பொதுவாக, 10-க்கு உடையவன் பாதகாதிபதியாக இல்லாமல் இருந்து லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு மதிப்பு, கௌரவம், பெரிய பதவி, அதிக ஐஸ்வரியம் போன்ற உன்னதமான பலன்கள் தேடி வந்து சேரும். ஜாதகத்தில் தருமகருமாதிபதி யோகம் அமைந்தவர்களில் பெரும்பாலோர் சுய தொழிலில் கொடி கட்டி பறப்பவர்களாகவே இருக்கிறார்கள். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஒரு சிலரே. எனவே, இந்த யோகம் அமைந்தவர்கள் பெரிய தொழில் அதிபர்கள் ஆகின்றனர்.
கூட்டுத் தொழில் என்பது நிறைய பேர் பயப்பட கூடிய ஒன்று. ஜோதிடர்களும் இது சம்பந்தமான உண்மை கருத்தை வெளியிடுவதில் பல குழப்பம் அடைந்து வெவ்வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது என்ற வார்த்தையை கேட்டு வேறு ஒரு சிலர் குழப்பம் அடைகின்றனர். வாழ்க்கை கூட்டில்,அதாவது, லைப் பார்ட்னருடன் ஒத்து போகிறவர்கள் அனைவரும் கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்க முடியும். இதை முடிவுசெய்கிற தகுதி ஜாதகருக்கு மட்டுமே உள்ளது, வெளியில் உள்ள நண்பர்கள், சுற்றதினர்களுக்கு கூட இல்லை. சுருங்க சொன்னால் எல்லா விதத்திலும் நல்ல ஒத்துழைப்பு தருகின்ற மனைவி அல்லது கணவன் அமைகிறவர்கள் கூட்டுத் தொழிலில் தொடர்ந்து இருக்க முடியும். நிறைய நபர்கள் ஆரம்பத்தில் கூட்டுத் தொழில் செய்து, பிறகு இருவருக்குள் சண்டை நடந்து, சுயமாக தொழில் செய்து, இருவரில் ஒருவர் மிக பெரிய தோல்வியை அடைந்து வியாபார உலகில் காணாமல் போகிறார்கள்.
ஆக, லக்னத்திற்கு 10-க்கு 10-ஆம் வீடாகிய ஏழாம் வீட்டை ஆராய்ந்தால் ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏற்றதா இல்லையா என்று எளிதில் அறியலாம். பாப கிரகங்கள் 7-ஆம் வீட்டில் இருந்து, ஏழாம் வீட்டோன் 6,8,12-இல் மறைந்தால் இந்த கூட்டுத் தொழில் அறவே ஆகாது. இவர்களை கூட்டாளி பெரிய கடனில் மாட்டிவிட்டு அவர்கள் தப்பித்து விடுவார்கள். இதனால் இவர்கள் மானம் இழந்து போவது மட்டுமல்லாமல் கட்டிய மனைவியும் கண்டுக்காமல் சென்று விடுவாள்.
Happy Business Partners |
ஏழாமாதி சுபராகி லக்ன தொடர்பு பெற்று, லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகர் தொடர்ந்து கூட்டுத் தொழில் செய்வார். இவர்களை சுபகிரகமாகிய குரு நோட்டம் விட்டால் கூட்டளிகளுக்குள் என்றும் கருத்து வேறுபாடு இல்லாமல் இருப்பார்கள். இந்த கிரக அமைப்புடன் லாப ஸ்தான அதிபதியும் சம்பந்தம் பெறும் போது அதிக turnover அடைந்து மிக பெரிய பம்பர் லாபத்தை அடைவது திண்ணம். இந்த ஜாதகருக்கு சூரிய பலம் சிறிது அமையுமானால் மனோ பலத்துடன் கம்பீரமான காரியங்களை ஆற்ற முடியும். புதனின் பலம் சேர்ந்தால், பேச்சு சாதுரியத்தினால் அனைத்து காரியங்களையும் உடனுக்குடன் முடிக்கும் வல்லமை வந்து சேரும். எனவே இளம் வயதினர்கள் ஆரம்பத்தில் கூட்டுத் தொழிலை கண்டு பயப்பட வேண்டாம். உங்கள் ஜாதகத்திற்கு பொருத்தம் உடையவர்களுடன் கூட்டுவியாபாரம் செய்தால் குதூகலத்திற்கு குறை வாராமல் இருக்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்புபவர்கள் ஜோதிடரிடம் செல்லும் பொது கூட்டாளியுடன் செல்லாமல் தனித்து சென்றால் ஜோதிடர்கள் உண்மையை கூறி நல்வழி காட்ட முடியும்.
ஆக்கம் :-
சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர், ஜோதிடமாமணி
M பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக