மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 2 அக்டோபர், 2017

ஜாதக ஜலம் மோட்சம் - Moksha

ஜாதக ஜலம் மோட்சம்.முக்தி, மோட்சம் போன்றவைகளை அடைய பலவகை இருப்பினும், நமது ஜாதகத்தில் அதை மூன்று வகையாக பிரிக்கலாம்.

மோட்ச ஸ்தானம் என்றால் பன்னிரெண்டாம் பாவத்தை பார்ப்போம். இது பரமுக்தி என்பர். தற்போது நாம் வாழ்கின்ற நிலையில் பெறப்படும் முக்தி இகமுக்தி. இகமுக்தி என்பது இந்த உடல் மற்றும் மனம் அடைகின்ற சந்தோசமே.

மனமும் உடலும் அடைகிற சந்தோசங்கள் என்று பொதுவாக கூறினாலும் இதில் உடல் பெறும் இன்பங்களான பொருளாதாரமே பெரும்பங்கு வகிகின்றது. இதற்கு காரணமாக இருப்பது பணம், காசு, வீடு, கிணறு, வாகன வசதி வாய்ப்பு. இதை தரக்கூடிய இடமாக நாம் எடுத்து கொள்வது நாலாமிடம்.

மனம் பெரும்பங்கு நாடுகின்ற விசயங்களில் முக்கியமாக கருதபடுவது எதிர்பாலின சேர்க்கை. இதை நாம் அறிய பல பாவங்கள் இருப்பினும் அதனுடைய செயலாக்கத்தின் மூலம் தன்னை மறக்கும் இடமாக, இந்த சிற்றின்ப கடலிலே முழ்கி இரவில் சிறிது நேரமாவது உயிரை மறந்து சமாதி போல இருப்பதை காட்டும் மறைப்பு பகுதிக்குரிய பாவம் மறைவு ஸ்தானம் என்கிற எட்டாமிடம்.

மேலே கூறிய நாலும் எட்டும் தருகின்ற சுகம் தொடர் சுகமல்ல என புரிந்துகொண்ட பேரின்பத்தை நினைத்து இரவுபகலாக தன்னையே மறந்து இருக்கும் பாவமாக இருப்பது பனிரெண்டாமிடம். இந்த பாவத்தில் தன்னிலை மறந்து சமாதி நிலை பெற்று பௌதிக உடலுடன் இருந்தாலும் இல்லை பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்கள் ஒன்றில் இந்த உடலை கரைத்து கொண்டாலும் பெறக்கூடிய இன்பம் தரும் இடமே பனிரெண்டாமிடம்.

ஆக, நாம் இந்த உலகில் இருக்கும்போதே இம்மூன்று சுகங்களையும் சுகமாக அனுபவிக்கவேண்டும். காலபுருஷனுக்கு 4-8-12 இடங்கள் மோட்ச ஸ்தானங்கள் என்கிறோம். மேலும் இவைகளே ஜலராசிகள்.

நாலாம் வீட்டில் நாம் பெரும் ஜலம் நமது வீட்டில் உள்ள கிணறு, முனிசிபல் தண்ணீர் தங்கு தடையில்லாமல் இருப்பது.
எட்டாம்வீட்டில் நாம் பார்க்கும் ஜலம் என்பது கலவியில் காணும் சுக்ல சுரோணித ஜலமாகும்.

பனிரெண்டாம் வீட்டில் நாம் பெறும் ஜலம் என்பது ஜீவன்முக்தர்கள் பெறக்கூடிய அமுததாரை என்கிற ஜலம்.

ஆக, நாலில் உள்ள கிணற்று ஜலம் நமது சாதாரண சௌகரியம் மூலம் தன்னை (உடலை) மறந்து சந்தோசத்தில் தூங்கிபோவது,

எட்டில் கலக்கும் ஜலம் சிற்றின்ப கடலில் முழ்கி சற்று நேரம் தன்னை (உடலை) மறந்து தூங்கிபோவது,

பனிரெண்டில் பெற்ற ஜலத்தால் தன்னை (உடலை) முழுவதும் மறந்து போவது.

ஆக, இந்த 4-8-12 இடங்கள் அவரவர்களுக்கு ஜலராசியாகவோ அல்லது மேற்கூறிய இடங்களில் ஜலகிரகங்களின் சம்பந்தமோ ஏற்படும்போது, மேலே கூறிய இந்த மூன்று மோட்சத்தையும் எளிதில் அடைய முடியும்.

-M.Balasubramanian  (Vellore Bala Jothidar) 9443540743


(வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் & வேலூர் ஜோதிடம் வாட்ஸ்அப் கிளப் மூலம் 1-10-2017  சென்னை, மடிபக்கம், கார்திகேயாபுரம், கூட்டுறவு கல்யாண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் நிகழ்த்திய ஜாதக ஜலம் மோட்சம் உரையின் சுருக்கம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக